Wednesday, December 23, 2015

அர்ஜுன விஷாத யோகம் - அத்தியாயம் 1 - தொடர்ச்சி

ஸ்லோகம் 1.7
அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைநயஸ்ய சஞ்ஜ்ஞார்த்தம் தான்ப்ரவீமி தே||

விளக்கம்
இனி எனது படைக்கு நாயகராய் நம்முள்ளோரில் சிறந்தவர்களையும் தெரிந்து கொள். இரு பிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்கு உணர்த்துகிறேன்.

ஸ்லோகம் 1.8
பவான்பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச சமிதிஞஜய:|
அஸ்வத்தாமா விகர்னஸ்ச ஸௌமதத்தி ஸ்ததைவ  ச ||


விளக்கம்

நீ, பீஷ்மன், கர்ணன், பொருணர் கூட்டத்தை வெல்வொனாகிய கிருபன், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன் மகன்,

ஸ்லோகம் 1.9

அந்யே ச பஹவ: ஸுரா மதர்த்தே த்யக்தஜீவிதா:|
நானாஸஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஸாரதா:||


விளக்கம்

இன்னும் வேறு பல ஸூரர், என் பொருட்டு வாழ்க்கையை துறந்தோர், பல விதமான ஆயுதங்ககளும் அம்புகளும் உடையோர், எல்லோருமே போரில் நிபுணர்.

ஸ்லோகம் 1.10

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரஷிதம்|
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரஷிதம்||


விளக்கம்
எனினும் பீஷ்மரால் காக்கப்படும் நமது படை கண்ணுக்கு நிறைந்திருக்கவில்லை. பீமனால் காக்கப்படும் அவர்களது படையோ நிறைந்திருக்கிறது

ஸ்லோகம் 1.11
அயனேஷூ ச சர்வேஷூ யதா பாகமவஸ்திதா:|
பீஷ்மமேவாபிரஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி||


விளக்கம்
நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்று கொண்டு பீஷ்மனையே காக்கக்கடவீர்.

ஸ்லோகம் 1.12
தஸ்ய சஞ்சனயன்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:|
சிம்ஹனாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ பிரதாபவான்||


விளக்கம்
அப்போது துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு, கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் பீஷ்மன்,
உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.


ஸ்லோகம் 1.13
தத: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோ முகா:|
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ ஸப்தஸ்துமுலோஸ்பவத்||


விளக்கம்
அப்பால், சங்குகளும், தம்பட்டங்களும் பேரிகைகளும், கொம்புகளும், பறைகளும் திடீரென ஒலித்தன. அது பேரோசையாயிற்று.

ஸ்லோகம் 1.14
தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ|
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ ஸங்கௌ பிரதக்மது:||


விளக்கம்
பின்பு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும், தம்முடைய தேவ சங்குகளை ஊதினர்.

ஸ்லோகம் 1.15
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஸோ, தேவதத்தம் தனஞ்சய:|
பவுண்டரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர: ||


விளக்கம்
கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கை ஊதினான். அஞ்சுதற்குரிய செயல்களை செய்யும் ஓநாய் வயிற்று பீமன் பௌன்றம் என்னும் பெரும் சங்கை ஊதினான்.

ஸ்லோகம் 1.16
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:|
நகுல: சஹதேவஸ்ச ஸூகொஷமணிபுஷ்பகௌ||


விளக்கம்
குந்திமகனாம் யுதிஷ்டிரர் அனந்த விசயத்தையும், நகுல மற்றும் சகாதேவன் முறையே சுகோஷம் மற்றும் மணி புஷ்பகம் எனும் சங்குகளையும் ஊதினர்.

ஸ்லோகம் 1.17
காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ: ஸிகண்டீ ச மகாரத: |
திருஷ்டத்யும் நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித:||


ஸ்லோகம் 1.18
த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ: ப்ருதிவீபதே|
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹூ: சந்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்:||


விளக்கம்
வில்லாளிகளில் சிறந்த காசி ராஜனும், சிகண்டியும், த்ருஷ்டத்யும்ணனும், விராடனும், வெல்லப்படாத சாத்யகியும், த்ருபதானும் , திரௌபதியின் மக்களும், பெருந்தோளுடைய சுபத்ரையின் மகனும்  தனித்தனியே தம் தம் சங்குகளை ஊதினர்

ஸ்லோகம் 1.19

ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ரானாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்|
நப்ஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோஸ்ப்யனுனாதயன்||


விளக்கம்
பூமிக்கு தலைவனே திருதராஷ்டிர மன்னா, அந்த பெரும் முழக்கம் வானையும் மண்ணையும் உடன் ஒலிக்கச் செய்வதாக, திருதராஷ்டிர கூட்டதாரின் நெஞ்சுகளை பிளந்தது.


ஸ்லோகம் 1.20
அத வ்யவச்திதாந்த்ருஷ்ட்வா தார்த்த ராஷ்ற்றாந் கபித்வஜ:|
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸ்ம்பாதே தனுருத்யம்ய பாண்டவ:||

ஹ்ருஷீகேஸம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே|


விளக்கம்
அப்பால், இரு புறங்களிலிருந்தும் அம்புகள் பறக்க தலைப்படுவதற்கு முன்பாக, குரங்கு கோடியை உடைய பார்த்தன், திருதராஷ்டிர கூட்டத்தினரை நோக்கி, வில்லை ஏந்திக்கொண்டு கண்ணனை பார்த்து இவ்வண்ணம் கூறலுற்றான்  

Tuesday, December 22, 2015

அர்ஜுன விஷாத யோகம் - அத்தியாயம் 1

அத ப்ரதமோ த்ய்யாயஹா

அர்ஜுன விஷாத யோகம்


    குருக்ஷேத்திரப் போர் நடைபெறுகையில் கண்ணில்லா திருதராஷ்டிர ராஜன் தான் அங்கு செல்லக்கூடாமையால், ஹஸ்தினாபுரத்தில் தன் அரண்மனையில் இருந்து கொண்டே, போர்களத்து செய்திகளை தமக்கு சொல்லும்படி சஞ்சயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேத வியாசரின் அருளால் ஞான திருஷ்டி பெற்றவனாக சஞ்சயன் போர்களத்து செய்திகளை திருதராஷ்டிரனுக்கு சொல்லுகிறான்.

    கண்ணனுக்கும், பார்த்தனுக்கும் போர் தொடக்கத்தில் நடந்த சம்பாஷணையை, சஞ்சயன் கூறுவதாக சமைக்கப்பட்ட பகவத் கீதைக்கு இந்த முதல் அத்தியாயம் பாயிரமாக* கருதத்தகும்.

ஸ்லோகம்  1.1

    திருதராஷ்டிர உவாச

    தர்மஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்சவ:|
    மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத சஞ்சய||


விளக்கம்

    திருதராஷ்டிரன் சொல்லுகிறான்.
    சஞ்சயா, அறனிலமாகிய குருக்ஷேத்திரத்தில், போர் செய்ய வேண்டி திரண்ட நம்மவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தனர்.


ஸ்லோகம் 1.2

    சஞ்சய உவாச
    த்ருஷ்ட்வாது பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்ததா|
    ஆசார்யமுபசங்கம்ய ராஜா வசனமப்ரவீத் ||

விளக்கம்

    சஞ்சயன் சொல்லுகிறான்
    அப்போது துரியோதன ராஜன் அணி வகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்துவிட்டு ஆசார்யர் துரோணரிடம் சென்று பின்வருமாறு கூறலாயினன்.

ஸ்லோகம் 1.3

    பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
    வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா ||

விளக்கம்

    குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுக்கப்பட்ட இந்த பாண்டவ படையை பார்.

ஸ்லோகம் 1.4

    அத்ர ஸுரா மகேஷ்வாஸா பீமார்ஜூனஸமா யுதி |
    யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மகாரத:||

விளக்கம்

    இங்கு சூரரும், பெரிய வில்லாளிகளும்  போரில் பீமனையும், பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள். யுயுதானன், விராடன், மகாரதனாகிய துருபதன்.


ஸ்லோகம் 1.5

    த்ருஷ்டகேதுஸ்சேக்ஹிதாந:  காஸிராஜஸ்ச விர்யவான்|
    புருஜித்குந்தி போஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்க்கவ:||

விளக்கம்

    த்ருஷ்டகேது, சேகிதானன், வீர்யமுடைய காசிராஜன், புருஜித், குந்திபோஜன்,


ஸ்லோகம் 1.6
    யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச விரிவான்|
    ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச சர்வ ஏவ மஹாரதா:||

விளக்கம்
    வலிமை மிக்க யுதாமன்யன், உத்தமௌஜா எனும் வீரன், சுபத்திரை மகன், திரௌபதியின் மக்கள், எல்லோருமே மகாரதர்.



* பாயிரம் என்பது நூலாசிரியர் தாம் கூறப்போகும் கருத்துக்களை முன்னுரையாக முதலில் கூறும் பகுதி.

Monday, December 7, 2015

கீதாரம்பம்

    பாரதப் போர் துவங்குவதற்கு முன்பாக கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தான், பகவத் கீதையாக மகாபாரதத்தில் இடம் பெருகிறது.  போர்களத்தில் கௌரவ பாண்டவ சேனைகள் அணிவகுத்து நின்ற நிலையில் அர்ஜுனனுக்கு நேர்ந்த மனக்குழப்பத்தை தீர்க்கும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணரால் தன்னுடைய முதன்மை சீடனுக்கு,  "ஸ்திதப்பரஞனுக்கு" உபதேசிக்கப்பட்டது.  கிருஷ்ணர் அர்ஜூனர் உரையாடல் முடிந்த பிறகு தர்மபுத்திரர் பீஷ்மரிடமும், துரோணரிடமும் அனுமதி பெறுகிறார். அதன் பின்னர் சேனாதிபதிகள் தத்தம் சங்குகளை முழங்கிய பின்னரே யுத்தம் துவங்குகிறது.  அம்புகள் விடுபடுவதற்கு முன்பாக கீதை உபதேசிக்கப்பட்டதாக மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது.

    பகவத் கீதை உபநிஷத்த்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது. வேதங்களை கர்ம காண்டம் என்றும், உபநிஷத்துக்களை ஞான காண்டம் என்றும் கூறுவது உண்டு. வேதங்கள் யாகம் செய்வது போன்ற சம்பிரதாயங்களை விளக்குபவை. அதற்குரிய மந்திரங்களை கொண்டவை. இறைவனை மனிதர்கள் வேண்டிக்கொள்ளத்  தக்க வழிமுறைகளை விளக்குபவை. ஆதலால் அது கர்ம காண்டம்.

    வேதத்தின் இறுதி வேதாந்தம். அவை உபநிஷத்துக்களில் அடங்கியிருக்கிறது. உபநிஷத்துக்கள் மெய்ப்பொருளை விளக்குபவை எனக்கொள்ளலாம். அதாவது ஞானத்தை அளிப்பவை. அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத் கீதையில் அடங்கியிருக்கிறது எனக்கொள்ளலாம்.

    உபநிஷத்துக்களின் போக்கை விளக்குபவை பிரம்மசூத்திரம். உபநிஷத்துக்கள், அதன் போக்கை விளக்கும் பிரம்மசூத்திரம், அதன் சாற்றை பிழிந்து தரும் பகவத் கீதை, இந்த முன்றும் சேர்ந்து "ப்ரஸ்தானத்த்ரயம்" என்று கூறப்படுகிறது. அதாவது முடிவான தீர்வான மூன்று என்பதாகும்.

    பகவத் கீதைக்கு பல பெரியோர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வாசாரியார் ஆகியோர் அளித்த உரைகள் பிரசித்தியானவை. இவர்களுடைய உரை மூன்று வெவ்வேறு கோணங்களிலிருந்து பகவத் கீதையை அணுகுபவை.

  • ஆதிசங்கரர் அருளிய கோட்பாடு "அத்வைதம்".   -  ஜீவராசிகளின் ஆத்மாவும், இறைவனாகிய பரம்பொருளும் ஒன்றே ஆகும் என்பது அத்வைதம். அத்வைதம் என்றால் இரண்டானதல்ல என்று பொருள்.
  • ஸ்ரீ ராமானுஜர் அருளியது "விஷிஷ்டாத்வைதம்" - அதாவது விஷேஷமுடைய இரண்டற்ற தன்மை. ஜீவராசிகளின் ஆத்மா பரம்பொருளிலிருந்து தோன்றுகிறது. முக்தியடையும் போது மீண்டும் பரம்பொருளையே அது சாரும். அது வரை ஜீவாத்மா வேறாக இருந்தாலும், அது பரம்பொருளின் அம்சமே என்பது இதன் பொருள். பரம்பொருள் சூரியன் போல, ஆத்மா அதன் கிரணங்கள் போல.
  • ஸ்ரீ மத்வாச்சாரியார் அருளியது "த்வைதம்" - அதாவது இரண்டானது என்று பொருள். பரம்பொருள் வேறு ஜீவராசிகளின் ஆத்மா வேறு என்பது இதன் பொருள்.


மேற்கொண்டு பாராயணம் செய்யும் முன் தியான ஸ்லோகம்.

    ஓம் தாயே பகவத் கீதே. சாக்ஷாத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மகாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள், அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியை போக்குபவள்,  பதினெட்டு அத்தியாயங்களை உடையவள், ஆகிய பகவதியே உன்னை த்யானிக்கின்றேன்.

    விசால புத்தி உடையவரும், நன்கு அலர்ந்த தாமரை போன்ற கண் உடையவருமாகிய வியாசரே, மகாபாரதம் என்ற, எண்ணை நிறைந்த ஞான தீபத்தை ஏற்றி வைத்த உமக்கு நமஸ்காரம்.

    சரணடைந்தவருக்கு கற்பக வ்ருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு பிரம்பை ஒரு கையில் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தை கறந்தவனும், சின்முத்திரை தான்கியிருப்பவனுமாகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.


    உபநிஷதங்கள் யாவும் பசுக்கள், க்ருஷ்ணன் பால் கறப்பவன். பார்த்தன் கன்று, அருந்துபவர்கள் பேரறிஞகர்கள். கீதை எனும் அமிர்தம் இவ்வாறு ஒப்பற்ற பாலாகிறது.

    வசுதேவருடைய மகன், கம்சனையும், சானூரனையும் கொன்றவன், தாய் தேவகிக்கு பரமானந்தத்தை கொடுப்பவன், ஜகத்குரு தேவன் கிருஷ்ணனையும் வணங்குகிறேன்.

    குருக்ஷேத்திரத்தில் இருந்த ரண நதிக்கு, பீஷ்மரும், துரோணரும் கரைகள், ஜெயத்ரதன் நீர், காந்தார மன்னன் நீலொத்புலம் என்னும் புஷ்பம், சல்லியன் சுறா மீன், துருபன் பிரவாகம், கர்ணன் பேரலை, அஸ்வத்தாமனும், விகர்ணனும் மகர மீன்கள், துரியோதனன் நீர்சுழல். கிருஷ்ணனை படகோட்டியாகக் கொண்டு இது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.

    பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு எனும்  நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, உபன்யாசங்களால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் எனும் தேன் வண்டுகளால் நாள் தோறும் அனந்தமாக அருந்தப் பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தை உடைய குற்றமற்ற மகாபாரதம் எனும் தாமரைப்பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.

    யாருடைய கிருபையானது உமையை பேச வைக்கிறதோ, முடவனை மலையை தாண்டச் செய்கிறதோ அந்த பரமானந்த மாதவனை வணங்குகிறேன். பிரம்மா, வருணன், இந்திரன், ருத்ரன், தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, சாம கானம் செய்கின்றவர்கள், யாரை அங்கமும், பதக்ரமும், உபனிஷதுக்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார் பால் வைத்து உணர்கிறார்களோ, சூர, அசுர கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்கள் இல்லையோ, அந்த தெய்வத்திற்கு நமஸ்காரம்.

அறிதல் ஆரம்பம்.

    ஜென்மம் எய்தி இதுகாறும் 7 கழுதை வயதாயிற்று. இதுநாள் வரை எந்த ஆஸ்திக விஷயங்களிலும் ஆர்வமில்லாது எமனார் வாகனத்தின்  மேல் சென்னை பெருவெள்ளம் பெய்ந்தது போல் இருந்தாயிற்று. பௌத்திர செல்வங்கள் மழலையில் மனனம் செய்த ஸ்லோகங்களை ஒப்பிக்கும் போதெல்லாம், சான்றோன் எனக்கேட்ட பாட்டி(அதாங்க என் அம்மா) , பாருடா இது போல ஒருநாளாவது நீ சொன்னதுண்டா என்று என் செல்வங்கள் முன் அவமானப்படுத்த(நீ எப்பம்மா இதெல்லாம் எனக்கு சொல்லிக்குடுத்த. டி.வி சீரியல் தான பார்த்தே) பொங்கியெழுந்தான் இந்த மனோகரன்.

    முடிவு பண்ணியாச்சு. ஏதாவது படிச்சு, ஒப்பிச்சே ஆகணும். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்(எங்க வீட்ட்லயும் யாரும் கேக்கமாட்டா).

    எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதிலேயே எனக்கு ஒரு அதீத குழப்பம். முழுமையாக ஏற்றுக்கொள்வதிலோ, நிராகரிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. Random ஆக அங்கொன்றும் இங்கொன்றும் படித்ததில் எனக்கு இந்திய ஞான மரபின் மீது நிறைய மதிப்பு உண்டாயிற்று.

    என்னை சத் விஷயங்களில் ஆர்வம் கொள்ள வைத்ததில் வெளிப்படையான இரட்டை நிலை கொண்ட இந்திய இடதுசாரிகள், நேர்மையற்ற ஊடகங்கள், மத வியாபாரிகளுக்கு தம் மக்களை அடகு வைக்க ஆர்வம் கொண்ட தலித் போராளிகள், அவர்களை முழுமையாக பயன் படுத்திக்கொள்ளும் சிறுபான்மை யினர்  என்று எல்லோருக்கும் சம பங்கு உண்டு.

    எதற்கெடுத்தாலும்  மோடியையும், பா.ஜா.கா வையும், மனு தர்மத்தையும் தர்ம சாத்து சாத்துவதில் உலகளாவிய அரசியல் ஒன்று நம்மையும் அறியாமல் நம்மை நகர்த்தி செல்கிறதென்கிறதென்பது தெளிவாக தெரிகிறது.  அரசியல் மதம் பரப்புவதை முதன்மை நோக்கமாக கொண்ட மதங்களெல்லாம் அமைதியின், சகோதரத்துவத்தின் முகங்களாக முன்வைக்கப்படும் போது, ஞானத்தை தனி மனித தேவையாக நிறுத்தும் சனாதனமா மனிதனை அடிமைப்படுத்தப்போகிறது?  உலகெங்கிலும் போர்களின் மூலம் வலுக்கட்டாயமாக தம் மதத்தை பரப்பிய(பரப்பிவரும்), தனி மனித தேவைகளை / தேர்வுகளை புறம் தள்ளி, எதையும் புனித புத்தகத்தில்?  உள்ளதை மட்டுமே பின்பற்ற வலியுறுத்தும் மதங்களை விடவா என் பாரம்பரியம் கீழானது என்ற ஆதங்கம் மேலோங்குவதை தவிர்க்க முடிவதில்லை. 

    சரி. படிப்பெதென்று முடிவான பின் எதை படிப்பது.

    ஸ்லோகங்கள் கேட்பதர்கினிதாக இருந்தாலும், வினாயகரையோ, சுப்ரமனியரையோ, ராமரையோ, அபிராமியையோ சரணாகதி நிலையிலிருந்து துதி பாடுபவை. கேள்வியில்லா நம்பிக்கை உடையோருக்கானவை அவை. ஆனால் இந்திய ஞான மரபின் அடிப்படை தத்வங்கள். தத்வங்கள் என்று வரும்போது வேதங்கள், உபநிஷதங்கள் அவையே முதன்மையானவை ஆகின்றன.  சா பூ த்ரீ போட்டு பார்த்ததில் கீதை தெரிவானது.


    ஆனால் மனனம் செய்வதில் சிறுவயதிலிருந்தே ஆர்வமில்லை. Because, basically I am a lazy fellow you know. அதனால் தினமும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களை படித்து அதை அப்படியே இங்கு பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

    விவாதத்தில் ஆர்வமில்லை. சதுர் வர்ணங்களை படைத்தது நானே என்று கூறுகிறானே கிருஷ்ணன், அப்படியானால் சாதிகளை நிறுவியவன் கடவுளா என்பது போன்ற விதண்டாவாதங்கள் வேண்டாம். இது என் நோட்டு புத்தகம். மீண்டும் மீண்டும் புரட்டிப் படிக்க எழுதுகிறேன்.


இனிதே வித்யாரம்பம்.